ஆவடி அருகே சுங்கச்சாவடி காவலாளி கொலையில் வாலிபர் கைது

ஆவடி அருகே சுங்கச்சாவடி காவலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

ஆவடி:

ஆவடியை அடுத்த நெமிலிச்சேரி அருகே வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி வெளி வட்ட சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடியில் காவலாளியாக இருந்தவர் திருநின்றவூர் பிரகாஷ் நகர் 16-வது தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 50).

நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்தனர். அருகில் இருந்த லாரி டிரைவர்களையும் தாக்கி செல்போன், பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து முத்தா புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இணை கமி‌ஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் மேற்பார்வையில் பட்டாபிராம் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயசங்கர், குணசேகரன், புருஷோத்தமன், ஆகியோர் கொண்ட 3 தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே உள்ள முல்லை நகர் ஏரிக்கரையில் பதுங்கி இருந்த திருநின்றவூர் பவானி நகர், திலகர் தெருவை சேர்ந்த சுரேசை (வயது 19) கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்த போது சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளியான திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியை சேர்ந்த விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜய் என்பவரை தேடி வருகின்றனர்.

சுரேஷ்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com