பல்லடத்தில் ஆட்டோ டிரைவர்களை தாக்கிய 3 பேர் கைது

பல்லடத்தில் ஆட்டோ டிரைவர்களை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

பல்லடம்:

பல்லடம் சேடபாளையம் பிரிவு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் ரவி (52). இவர் பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் பயணியை ஏற்றிக் கொண்டு பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள சின்னிய கவுண்டம் பாளையத்திற்கு சென்றார்.

அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் முன் கண்ணாடி உடைந்து விட்டது.

ஆட்டோவில் வந்த பயணிக்கும், டிரைவர் ரவிக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. பின்னர் ஆட்டோவை தூக்கி நிறுத்த அருகில் உள்ளவர்களை அழைத்த போது அங்கு வந்த 3 பேர் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி விட்டாய் என ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறி 3 பேரும் ரவியை தாக்கினார்கள்.

இது குறித்து ரவி ஆட்டோ ஸ்டாண்டு நண்பர்களுக்கு தகவல் கொடுத்தார். ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து பல்லடம் மகாலட்சுமி புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (46) அங்கு வந்தார். அவர் ரவியை அடிப்பதை தடுத்தார். அவரையும் 3 பேர் தாக்கினார்கள்.

அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர். 3 பேர் தாக்குதலில் காயம் அடைந்த ரவி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியிலும், ரவிச்சந்திரன் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆட்டோ டிரைவர்களை தாக்கியவர்களை கைது செய்ய கோரி பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ரவி கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர்களை தாக்கிய சின்னிய கவுண்டம் பாளையம் மணிவண்ணன் (43), கதிர்வேல் (45), சுரேஷ்குமார் (34) ஆகியோரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.

ஆட்டோ டிரைவர்களை தாக்கிய சம்பவத்தால் நேற்று மதியம் வரை பல்லடத்தில் ஆட்டோக்கள் ஓடவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com