நடிகர் சிவகுமார் உறவினர்களுக்கு அரிவாள் வெட்டு - ஆட்டோ டிரைவர் கைது

சூலூரில் நடிகர் சிவகுமாரின் உறவினர்களை அரிவாளால் வெட்டிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சூலூர்:

நடிகர் சிவகுமாரின் நெருங்கிய உறவினர் குமரேசன் (வயது 80). இவர் சூலூர் ஏ.கே.ராமசாமி தேவர் வீதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரை பார்க்க அவரது மருமகன் குமாரசாமி (61), பேரன் அகிலேஷ் ஆகியோர் நேற்று வந்து உள்ளனர். பின்னர் இரவு 7.30 மணிக்கு அகிலேஷ் காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சதீஸ்குமார் (26) மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள், கார் மீது மோதி உள்ளது. இதனால் அகிலேஷ் மற்றும் சதீஸ்குமார் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் அகிலேஷ் தனது தந்தை குமாரசாமி மற்றும் தாத்தா குமரேசன் ஆகியோரை செல்போனில் நடந்த சம்பவத்தை கூறி அந்த இடத்திற்கு வரும்படி அழைத்தார். உடனே அவர்கள் அங்கு சென்று அகிலேஷ்க்கு ஆதரவாக பேசினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து குமரேசனை தலையில் வெட்டினார். இதனை தடுக்க வந்த குமாரசாமியையும் வெட்டியதாக தெரிகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில், அலறிய அவர்களின் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் விரைந்து வந்து சதீஸ்குமாரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்னர் காயமடைந்த குமரேசன், குமாரசாமி ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் சதீஸ்குமாரை சூலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com