

சென்னை :
‘துக்ளக்’ இதழின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து நேற்று முன்தினம் ஒரு பரபரப்பு கருத்தை தெரிவித்தார். அதில், ‘‘நான் கூறியதாலேயே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்தார். அதனால் தான் மாற்றம் ஏற்பட்டது. பிரிந்து கிடந்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்ததில் தனக்கும் பங்கு உண்டு’’ என்று குருமூர்த்தி தெரிவித்திருந்தார்.
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘‘குருமூர்த்தியின் பேச்சு திமிர்வாதத்தின் உச்சம். இவ்வளவு திமிர் அவருக்கு கூடாது. குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை. அ.தி. மு.க.வை தொட்டு, வாங்கி கட்டிக்கொண்ட வரலாறும் குருமூர்த்திக்கு உண்டு’’ என்றார்.
இந்தநிலையில், குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசியபோது அவரை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அ.தி.மு.க.வினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர்தான் அ.தி. மு.க.வை சசிகலாவிடம் இருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை உண்டு. இதை ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன்.
திருச்சி ‘துக்ளக்’ கூட்டத்தில் அதை கூற காரணம் எனக்கு முன் பேசியவர், ஜெயலலிதாவை ஆதரித்த ‘துக்ளக்’, ஜெயலலிதாவை ஏற்ற சசிகலாவை எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். அதற்கு பதில் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு, அவர் எப்படி அ.தி.மு.க.வை மீட்டார் என்று கூறினேன்.
எனவே முன்னும், பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அ.தி.மு.க.வில் அதிகம் பேரை தெரியாது. தெரிந்தவர்களில் ஓ.பன்னீர்செல்வம் மேல் தான் கருத்து வேறுபாடுகள் தவிர்த்து அதிக மரியாதை உண்டு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.