ஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்

ஆத்தூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவர் அவரை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிங்காரம்- கொலையுண்ட சுமதி
சிங்காரம்- கொலையுண்ட சுமதி
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். (வயது 65). இவர் பெத்தாம்பட்டி டோல்கேட் அருகே உள்ள மோகன்குமார் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிங்காரத்தின் பழக்கம்- வழக்கம் சரியில்லை என்பதை தெரிந்து கொண்டும் அவரது சந்தேக டார்ச்சர் காரணமாக முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து சிங்காரம் 2-வதாக வெள்ளையம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிங்காரத்தின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அதனை தாங்க முடியாமல் வெள்ளையம்மாள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் சிங்காரம் 3-வதாக சுமதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு தங்கம், வேலு, சக்தி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

சுமதி வீட்டில் பசுமாடுகள் வளர்த்து வந்தார். இந்த பசுமாடுகளிடம் பால் கறந்து அதனை தினமும் பால் பண்ணை மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு கொடுத்து விற்பனை செய்து வந்தார். இதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குழந்தைகளின் படிப்பு செலவை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் சிங்காரம் தனது மனைவி சுமதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஊர்மக்கள் சமாதானம் செய்து வைத்தும் சிங்காரம் கேட்கவில்லை என தெரிகிறது.

நேற்று இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்த சிங்காரம், இனிமேல் தனது மனைவியை விட்டு வைக்கக் கூடாது. அவரை கொலை செய்து விட வேண்டும் என முடிவு செய்தார். இதற்காக நேரம் பார்த்து தூங்காமல் காத்திருந்தார்.

இன்று அதிகாலை சுமதி எழுந்து வீட்டில் வெளியே மாட்டுகொட்டகையில் கட்டியிருந்த பசுமாடுகளிடம் பால் கறப்பதற்காக வழக்கம் போல் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்றார்.

அப்போது மாட்டு கொட்டகையில் பதுங்கியிருந்த சிங்காரம் ஒரு பெரிய செங்கல்லை எடுத்துக்கொண்டு, பின்பக்கமாக வந்து சுமதியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அதே இடத்திலேயே சுமதி சுருண்டு விழுந்தார். தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தன் கண்முன்னே மனைவி துடித்து கொண்டிருப்பதை கண்டு மனம் இரங்காமல் சிங்காரம் ஈவு, இரக்கமின்றி வெறித்தனத்துடன் சம்மட்டி கம்பால் சுமதி தலையில் சரமாரியாக அடித்து கொலை செய்தார்.

சுமதி இறந்து விட்டதை உறுதி செய்த சிங்காரம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

காலையில் நீண்ட நேரமாக தாயார் வீட்டிற்கு வராததால் மகன் வேலு, அம்மாவை தேடி மாட்டு கொட்டகைக்கு சென்று பார்த்தார். அங்கு தாய் சுமதி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

இந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து ஊர் மக்கள் அங்கு கூடி ஆத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தாயார் உடலை பார்த்து 3 குழந்தைகளும் அம்மா, அம்மா என கதறி அழுதனர். இதை கண்டு அங்கு கூடி நின்ற மக்கள் சோகம் அடைந்தனர். தாயை இழந்து தவித்து நின்ற குழந்தைகளுக்கு அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சிங்காரத்தின் சொந்த ஊர் ஆறகளூர் பகுதியாகும். எனவே, இவர் ஆறகளூர் பகுதிக்கு தப்பி சென்று பதுங்கி இருக்கலாம் என கருதி தனிப்பிரிவு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் பிடியில் சிங்காரம் சிக்கினால் தான் சுமதியின் கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? அல்லது அவரை கொலை செய்து விட்டு 4-வது திருமணத்திற்கு திட்டமிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பன போன்ற பல்வேறு தகவல்கள் தெரியவரும்.

அதுமட்டுமின்றி பிரிந்து சென்ற முதல் மனைவி எங்கு இருக்கிறார்? அவர் என்ன ஆனார்? 2-வது திருமணம் செய்வதற்காக அவரையும் சிங்காரம் கொலை செய்தாரா? என்பன போன்ற பல்வேறு முடிச்சுகள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com