

ஆப்கானிஸ்தானில் அகதிகள் நலவாழ்வு இயக்குனரகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வெளிநாட்டில் இருந்து நிதி அளிப்பவர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் அலுவலகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இதனை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும்போது, அலுவலகத்தினுள் நுழைந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் உட்பட பலரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர்.
இதையடுத்து அவர்களை மீட்க அதிரடி படையினர் முயற்சித்தனர். இந்த முயற்சியில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.