

பாக்தாத்:
ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது.
இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் போன்ற அதிபயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழிக்க ஈராக் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தரை மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக் நாட்டின் மாகாண கவுன்சில் பாதுகாப்பு குழு தலைவர் சாதிக் அல் உசைனி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள டியாலா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் கடந்த இரண்டு வாரமாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது 19 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் 13 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.