

காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் சாரிகர் நகரில் பெட்ரோல் ஏற்றி வந்த லாரியை வெடிகுண்டு வைத்து தீவிரவாதிகள் தகர்த்ததில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் வடமேற்கு பகுதியில் உள்ள சாரிகர் என்ற பகுதியில் நேற்று இரண்டு பெட்ரோல் டேங்கர் லாரிகளை தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்ததாகவும், இந்த தாக்குதலில் அருகில் இருந்த பஸ் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பலத்த சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கோர தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. நேற்று முன் தினம் காபுல் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.