ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் நர்சு தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் நர்சு தஞ்சம்
Published on

ஆம்பூர்:

ஆரணியை சேர்ந்தவர் வடிவேலு மகள் லட்சுமி (வயது 28). சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றுகிறார். ஆம்பூர் சாத்தம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கலைவாணன் (30). இவர், சென்னையில் உள்ள சாக்லெட் கம்பெனியில் வேலை செய்கிறார்.

இந்த நிலையில், லட்சுமிக்கு கலைவாணன் அறிமுகமானார். இருவரும் பழகியதில் காதல் மலர்ந்தது. கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டு தரப்பில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, எதிர்ப்பை மீறி கலைவாணனை லட்சுமி திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு கேட்டு, நேற்று மாலை ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையறிந்த பெண் வீட்டு தரப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் லாரி மூலம் ஆரணியில் இருந்து திரண்டு வந்து ஆம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, போலீசார் இருத்தரப்பினரையும் சமரசம் செய்து வைத்து காதல் ஜோடியை தொந்தரவு செய்யக்கூடாது என்று எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com