

கோவை:
அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோவை காந்திபுரத்தில் கடந்த 4-ந் தேதி மாலை மறியல் போராட்டம் நடந்தது.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் 40 பேரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் கோவை மாநகர மத்திய போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோ காட்சி சமூகவலை தளங்களில் வேகமாக பரவியது.
வீடியோவில் உதவி கமிஷனர் ஜெயராமின் கையை பெண் சப்-இன்ஸ்பெக்டர் தள்ளி விடுகிறார். அதன்பிறகும் அவர் அத்துமீறி நடந்து கொண்ட காட்சி இருந்தது. இது போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொது இடத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலை தளங்களில் கடும் கண்டன குரல்கள் எழுந்தன.
இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநகர கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் அத்துமீறிய உதவி கமிஷனர் மீது துறை ரீதியாக மட்டுமல்லாமல் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இச்சம்பவம் குறித்து துணை கமிஷனர் லட்சுமி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. உதவி கமிஷனர் ஜெயராமன், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் துணை கமிஷனர் லட்சுமி விசாரணை நடத்தினார்.
அப்போது எந்தவித உள் நோக்கத்துடனும் இந்த செயல் நடக்கவில்லை, வீடியோவை பார்த்த பிறகு தான் இதுபோன்ற சம்பவம் நடந்ததே தெரிய வருகிறது என இருவரும் மறுத்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை இன்று டி.ஜி.பி.க்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
முன்னதாக சமூக வலை தளங்களில் பரவிய வீடியோ பதிவை சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்தனர். வீடியோவில் மார்பிங் ஏதும் செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு நடந்தது.
முதற்கட்டமாக உதவி கமிஷனர் ஜெயராமை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில் உதவி கமிஷனர் ஜெயராம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவரிடம் தமிழ்நாடு காவல் துறை சட்டம் 17(பி)-ன் கீழ் விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டது. மேலும் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று காலை தவறாமல் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
டி.ஜி.பி. அலுவலகத்தில் விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.