தந்தையை பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துகள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தந்தையை பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மகனிடம் இருந்து சொத்துகளை மீட்டு அதற்கான ஆணையை பூதத்தானிடம் உதவி கலெக்டர் வழங்கினார்
மகனிடம் இருந்து சொத்துகளை மீட்டு அதற்கான ஆணையை பூதத்தானிடம் உதவி கலெக்டர் வழங்கினார்
Published on

நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் பூதத்தான் பிள்ளை (வயது 85). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய முதல் மனைவி அம்மாபொண்ணு, 2-வது மனைவி பார்வதி. இதில் பார்வதியின் மகன் முருகன், அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு பூதத்தான் தனக்கு சொந்தமான 8 சென்டில் உள்ள 7 வீடுகளையும் முருகனுக்கு பத்திரம் எழுதிக்கொடுத்தார். அந்த வீடுகளை முருகன், அவருடைய மனைவி சாந்தியின் பெயருக்கு மாற்றி உள்ளார்.

சொத்துகளை எழுதி வாங்கியபோது தன்னுடைய தந்தையை பராமரித்து கொள்வதாக முருகன் உறுதி அளித்து இருந்தார். ஆனால், சமீபத்தில் தந்தையை பராமரிக்காமல் வீட்டில் இருந்து விரட்டி உள்ளார். இதையடுத்து பூதத்தான், மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள தன்னுடைய மூத்த மனைவியின் மகன் மகாலிங்கம் வீட்டுக்கு சென்று தங்கி இருக்கிறார்.

இதுதொடர்பாக பூதத்தானுக்கும், முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் தந்தையை அரிவாளால் வெட்டினார். இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார், முருகன் தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே விசாரணை நடத்தினார். பின்னர் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்-2007-ன் கீழ் பூதத்தான், முருகனுக்கு எழுதி கொடுத்த சொத்துகளுக்கான பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் அந்த சொத்துகள் மீண்டும் பூதத்தான் வசம் வந்துள்ளது. அதற்கான ஆணையை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே நேற்று பூதத்தானை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து அவரிடம் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com