

சசிகலாவின் அக்கா மகள் மற்றும் டி.டி.வி.தினகரன் சகோதரி சீதளதேவி. அவருடைய கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர், ரிசர்வ் வங்கியில் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது சி.பி.ஐ. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்தது உறுதியானதையடுத்து அவர்களுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு தண்டனை விதித்தது. சீதளதேவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்ச ரூபாய் அபராதமும், அவருடைய கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த நவம்பர் 16-ந் தேதி, எஸ்.ஆர்.பாஸ்கரன் மற்றும் சீதளதேவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள்.
ஆனால் தண்டனையை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அப்போது மறுத்ததால் இருவரும் சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் மார்ச் முதல் வாரத்தில் சரண் அடைந்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாஸ்கரன் மற்றும் சீதளதேவி ஆகியோர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இவற்றில் சீதளதேவியின் மனு மட்டும் நேற்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.