அசாமில் 5-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம்

அசாம் மாநிலத்தில் 5-ம் வகுப்பு மாணவியை மூன்று நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாமில் 5-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம்
Published on

கவுகாத்தி:

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டம், லாலங் கோன் பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவள் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த 21 வயது வாலிபர் மற்றும் இரண்டு சிறுவர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தீயில் கருகி உயிருக்குப் போராடிய சிறுமியை, நாகோன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 90 சதவீத தீக்காயம் இருந்ததால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு கவுகாத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே சிறுமி இறந்துபோனாள்.

முன்னதாக நாகோன் மருத்துவமனையில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த அந்த சிறுமி, தன்னை அதே பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசைன் மற்றும் தனது பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்கள் தன்னை சீரழித்ததாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களையும் கைது செய்தனர். ஜாகீர் உசைனைத் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல் நாகோன் மாவட்டம் சபார்முக் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு 35 வயது பெண் ஒருவர், அவரது கணவன் கண் முன்னே 8 நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

அசாமில் சர்பானந்த சோனோவால் அரசு 2016-ல் பொறுப்பேற்றது முதல் இதுவரை 3009 கற்பழிப்பு வழக்குகளும், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 106 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மாநில பட்ஜெட் கூட்டத் தொடரில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com