

புதுடெல்லி:
இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்து வரும் காஷ்மீரை, பாகிஸ்தானோடு இணைக்க வேண்டும் என்று சில பிரிவினைவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்திய குழுக்களாக போராடி வருகின்றனர். இதுபோன்ற பிரிவினைவாத தலைவர்களை கண்காணித்து மத்திய அரசு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, காஷ்மீரில் செயல்பட்டு வந்த பிரிவினைவாத இயக்கத்தோடு தொடர்புடைய அஸ்லாம் வானி என்பவர் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரினர். ஆனால், அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்தபோது அஸ்லாம் வானி செல்லாமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை அமலாக்கத் துறையினர் காஷ்மீருக்கு சென்று, அங்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த அஸ்லாம் வானியை கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லிக்கு அழைத்து வந்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ’’அஸ்லாம் வானி கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பிரிவினைவாத தலைவர் சபீர் ஷாவுக்கு உதவிசெய்து வந்தார். அவரது பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை கண்காணித்து வந்தோம். தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான ஜெய்ஷ் இ மொகமது அமைப்புக்கு பண உதவி செய்தது குறித்தும், ஷபீர் ஷாவிடம் நடந்த பண பேரம் குறித்தும் விசாரிக்க உள்ளோம்.
காஷ்மீரில் செயல்பட்டு வரும் அஸ்லாம் வானியை இன்று காலை கைது செய்துள்ளோம். அவரை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்த உள்ளோம்'' என தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கடந்த 26-ஆம் தேதி அமலாக்கத் துறையினர் ஷபீர் ஷாவை கைது செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.