கேரளாவில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த திட்டமா?: அருண்ஜெட்லி பேட்டி

கேரளாவில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து உள்ளதால் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை குறித்து நிருபர்களின் கேள்விக்கு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி பதிலளித்தார்.
படுகொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் குடும்பத்தினருக்கு அருண்ஜெட்லி ஆறுதல் கூறிய காட்சி
படுகொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் குடும்பத்தினருக்கு அருண்ஜெட்லி ஆறுதல் கூறிய காட்சி
Published on

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி பதவி ஏற்றபிறகு அந்த கட்சி தொண்டர்கள் - பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி அரசியல் மோதல்கள் நடந்து வருகிறது.

இந்த மோதல்கள் சமீப காலமாக படுகொலையில் முடிவதால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது.

இந்த கொலையை தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சியினரின் அலுவலகங்களும் கல்வீசி தாக்கப்பட்டது. மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் உள்பட கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி திருவனந்தபுரம் வந்தார். அவர் ராஜேஷ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதைதொடர்ந்து நடந்த இரங்கல் கூட்டத்தில் அருண்ஜெட்லி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேசை கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளனர். அவர் தனது கொள்கைக்காக உயிரையே விலையாக கொடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு தனது அரசியல் எதிரிகளை கொன்று குவிக்கிறது. இதுபோன்ற வன்முறைகளால் பா.ஜனதா தொண்டர்களை பயமுறுத்த முடியாது. இதில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மிகவும் மோசமான பாதையில் செல்கிறது. தங்களது கருத்துடன் ஒத்துப்போகாதவர்களை அழிக்கும் எண்ணத்துடன் செயல்படுகின்றனர். கேரளாவில் பா.ஜனதாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் இதுபோன்ற செயல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது.

அரசியல் எதிரிகளை கொலை செய்வதற்கும், வன்முறை சூழலை உருவாக்குவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது தொண்டர்களை பயன்படுத்துகிறது. வன்முறை மூலம் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.சை ஒடுக்கிவிட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இரங்கல் கூட்டம் முடிந்த பிறகு மத்திய மந்திரி அருண் ஜெட்லியிடம் ‘கேரளாவில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து உள்ளதால் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை விடுத்துள்ளதே’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அருண்ஜெட்லி அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தனிப்பட்ட கருத்து என்று கூறிவிட்டு சென்றார்.

இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் தலைமையில் திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு கம்யூனிஸ்டு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அரசியல் மோதலில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை மட்டும் அருண்ஜெட்லி சந்தித்ததை கண்டித்தும், படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அவர் சந்திக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் மோதல் காரணமாக பலியான 21 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

இதில் பேசிய கோடியேறி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

‘மத்திய மந்திரி என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். ஆனால் அருண்ஜெட்லி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை மட்டும் சந்தித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்.சின் அராஜகம் கேரளாவில் எடுபடாது. சமீபத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா கேரளா வந்து சென்ற பிறகுதான் அரசியல் படுகொலைகள் அதிகரித்துள்ளது. கேரளாவில் ஆட்சியை கலைக்கலாம் என்ற பா.ஜனதாவின் கனவு ஒருபோதும் பலிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

படுகொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் குடும்பத்தினருக்கு மத்திய மந்திரி அருண்ஜெட்லி ஆறுதல் கூறிய காட்சி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com