அரவிந்த் கெஜ்ரிவாலின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றார் அருண் ஜெட்லி

அரவிந்த் கெஜ்ரிவாலின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட அருண் ஜெட்லி, அவர் மீதான அவதூறு வழக்கை திரும்பப்பெறுவதாக கடிதம் அளித்துள்ளார். #ArunJaitley #ArvindKejriwal
அரவிந்த் கெஜ்ரிவாலின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றார் அருண் ஜெட்லி
Published on

புதுடெல்லி:

டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜெட்லி பொறுப்பு வகித்த போது அவர் ஊழலில் ஈடுபட்டிருந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் சஞ்சய் சிங், அஸ்தோஷ், குமார் விஸ்வாஸ், தீபக் பாஜ்பாய் மற்றும் ராகவ் சதா ஆகியோர் மீது அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார். டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மேற்கண்டவர்கள் தற்போது அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கோரியிருந்தனர்.

“செய்தித்தாள்களில் வந்த தகவல்களை வைத்து தங்கள் மீது குற்றம் சுமத்தி விட்டோம். தற்போது அந்த குற்றச்சாட்டை நாங்கள் திரும்பப்பெறுகிறோம். எனது குற்றச்சாட்டால் தங்களின் நன்மதிப்புக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எனது இந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு நீங்கள் தொடர்ந்த அவதூறு வழக்கை வாபஸ் பெற்று, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கேட்டுக்கொள்கிறேன்.” என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட அருண் ஜெட்லி டெல்லி ஐகோர்ட்டில் உள்ள அவதூறு வழக்கை வாபஸ் பெற கடிதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ArunJaitley #ArvindKejriwal #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com