

சேலம்:
ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளரான சசிகலா கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்ததால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியினர் பிரிந்து சென்றனர். 12 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களும், 12 எம்.பி.க்களும் அவருடன் இணைந்தனர்.
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விட்டதால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார். அவருக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அணிகளை இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்தது.
இதற்கிடையே கட்சியிலும், ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் மீது அந்த அணியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அவர்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவார்கள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் மீது திடீரென்று குற்றச்சாட்டுகள் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் தன்னை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் புறக்கணித்து வருவதாகவும், இதனால் ஓபி.எஸ். அணியில் இருந்து வெளியேறி விட்டதாகவும் கூறினார். தொகுதி மக்களையும், தொண்டர்களையும் சந்தித்து கருத்து கேட்டு முடிவு எடுப்பேன் என்றும் அறிவித்தார்.
அதன்படி நேற்று கோவை மாங்கரை பகுதியில் தொகுதிக்குட்பட்ட மக்களை ஆறுக்குட்டி சந்தித்து கருத்து கேட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., நான் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகியதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் தொகுதி வளர்ச்சி பணிகள் நல்ல முறையில் நடைபெறும் என்று யோசனை கூறினார்கள் என்றார்.
இதையடுத்து அவர் பழனிசாமி அணியில் இணைய முடிவு செய்தார். நேற்று திருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கினார்.
இன்று காலை 8.30 மணிக்கு சேலம் வந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்துக்கு சென்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அவருக்கு பொன்னாடை அணிவித்து அவரது அணியில் இணைந்தார்.
அவருடன் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சிலரும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து சென்ற போது ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. தான் முதல் ஆளாக போய் சேர்ந்தார். இப்போது முதல் ஆளாக அவர் அங்கிருந்து வெளியேறி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளார். இவர் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.
ஓ.பி.எஸ். அணியில் நிர்வாகிகள் உள்ளிட்ட மேலும் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் சேர முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரகசிய தூது விடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஓ.பி.எஸ். அணியில் அதிருப்தியில் இருப்பவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ். அணியில் உள்ள கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அருண் குமார், ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை எடப்பாடி பழனிசாமி அணிக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சேர்ந்த பின்பு அவருக்கு எந்த மாதிரியான வரவேற்பு உள்ளது என்பதை அறிந்த பின்பு மற்ற எம்.எல். ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வருவார்கள் என்று மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சந்தித்து பேசினார்.
இவர் தேர்தல் கமிஷனில் சசிகலா மீது முதலில் புகார் கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.