காஷ்மீரில் பக்ரீத் தொழுகைக்குபின் மீண்டும் 144 தடை உத்தரவு

காஷ்மீரில் தொழுகைக்கு வந்தவர்கள் சில இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றதால் பக்ரீத் தொழுகைக்கு பிறகு மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து கலவரம் ஏற்படலாம் என கருதி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுபடலாம் என கருதுவதால் மிகப்பதட்டமான இடங்களில் ஊரடங்கு உத்தரவும் மற்ற இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்ல வசதியாக சில இடங்களில் தடை உத்தரவு சில மணி நேரங்களுக்கு விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால் தொழுகைக்கு வந்தவர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று தடை உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் திறந்தன. மார்க்கெட்டுகளும் இயங்கின. ஏ.டி.எம்.களும் திறந்திருந்தன. அந்த நேரத்திலும் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது.

ஸ்ரீநகரில் பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பக்ரீத் தொழுகைக்காக காலையில் தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. அப்போது அருகில் உள்ள மசூதிகளுக்கு மட்டும் சென்று தொழுகை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. குறுகிய அளவிலேயே கூட்டம் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுசம்பந்தமாக பாதுகாப்பு படையினர் வாகனங்களில் ஒலிபெருக்கியில் அறிவிப்புகளை வெளியிட்டு சென்றனர். வழக்கமாக பக்ரீத் தொழுகை நடைபெறும் பல மசூதிகளில் இன்று தொழுகைக்கு அனுமதிக்கப்படவில்லை.

ஆனாலும், தொழுகைக்கு வந்தவர்களும், சில இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இன்று மதியம் வரை வேறு பெரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

பக்ரீத் தொழுகைக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டெலிபோன் மற்றும் இணையதள வசதிகள் தொடர்ந்து 7 நாட்களாக முடக்கப்பட்டுள்ளன. பக்ரீத் பண்டிகையையொட்டி அவை செயல்பட அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலவரம் வெடிக்கலாம் என கருதுவதால் செயல்பாட்டுக்கு அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்கும், முக்கிய தகவல்களை கூறுவதற்கும் போலீஸ் துறையே 300 இடங்களில் பொது டெலிபோன் வசதியை ஏற்படுத்தி இருந்தனர். அதன் மூலம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

முன்னாள் முதல்-மந்திரிகள் மெகபூபா முக்தி, உமர்அப்துல்லா ஆகியோர் தொடர்ந்து காவலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் முதலில் ஹரிநிவாஸ் மாளிகையில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் உமர் அப்துல்லாவை அங்கிருந்து அழைத்து சென்று வனத்துறைக்கு சொந்தமான ‘ஸ்பிளெண்டிட் ஹட்’ என்ற என்ற விடுதியில் தங்க வைத்தனர். இருவரும் தொடர்ந்து அங்கேயே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com