முதல்-மனைவியை விவாகரத்து செய்யாமல் 3 திருமணம் செய்த வாலிபர் கைது

போலி விவாகரத்து ஆணை மூலம், முதல் மனைவிக்கு தெரியாமல் 3 திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் 3-வது மனைவியும் கைதாகி உள்ளார்.
கைது
கைது
Published on

மதுரை:

மதுரை கூடல்நகரைச் சேர்ந்த கவிதா (வயது 35), தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், கே.புதூர் அழகர்நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (43) என்பவருடன் கடந்த 2008-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 25 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டதால் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தேன். அதன் பிறகு 2013-ம் ஆண்டு விதுபாலா என்ற பெண்ணை செந்தில்குமார் 2-வது திருமணம் செய்தார். ஆனால் சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட விதுபாலா பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் செந்தில்குமார் போலி விவாகரத்து உத்தரவு தயார் செய்து அதனை காட்டி அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்த மீனாட்சி (32) என்பவரை 3-வது திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்துக்கு செந்தில்குமாரின் சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து செந்தில்குமார் மற்றும் மீனாட்சி கைது செய்யப்பட்டனர்.

அவரது உறவினர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com