நடன குழுவினரை தாக்கி நகை பறித்த பிரபல ரவுடி கைது

சென்னை நடன குழுவினரை தாக்கி நகை பறித்த பிரபல ரவுடி முத்தியால்பேட்டையில் பதுங்கி இருந்தார்.அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

புதுச்சேரி:

சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் தில்லைஆனந்து. இவரது மனைவி தபசும் சல்மா (வயது 31). இவர்கள் இருவரும் ஆர்க்கெஸ்ட்ரா மற்றும் நடனகலை குழுவை நடத்தி வருகிறார்கள். சம்பவத்தன்று இவர்கள் பாக்கம் கூட்டுரோட்டில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழச்சிக்கு புதுவைக்கு வந்தனர். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் ரூம் வாடகை எடுத்து தங்கினர். இவர்களுடன் உறவினர் பெண் திவ்யா என்பவரும் வந்திருந்தார். 

திவ்யா பச்சை குத்திக் கொள்ள விரும்பியதால் அவரை மூலகுளம் திருமலை வாசன் நகரில் உள்ள பச்சை குத்தும் இடத்துக்கு தில்லை ஆனந்தும், அவரது நண்பர் தினேஷ் மற்றும் தபசும்சல்மா ஆகியோர் அழைத்து சென்றனர். அப்போது திவ்யாவுக்கு பச்சைகுத்தி கொண்டு இருந்தபோது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள் தாங்கள் பிரபல ரவுடி என்று கூறி தபசும்சல்மா அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி கொடுக்கும்படி மிரட்டினர். 

மேலும் அவர்கள் 4 பேரையும் முட்டி போட வைத்து தாக்கியதோடு தபசும்சல்மா அணிந்திருந்த தங்க செயின் மற்றும் மோதிரத்தை வலுக்கட்டாய மாக பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தபசும்சல்மா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சென்னை கலைக்குழுவினரை தாக்கி மிரட்டி நகையை பறித்து சென்றவர்கள் முத்தியால்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான டிராக் சிவா மற்றும் அவரது கூட்டாளி விக்கி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முத்தியால்பேட்டையில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த டிராக் சிவாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகளையும் மீட்டனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள விக்கியை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட டிராக் சிவா மீது பல்வேறு கொலை வழக்குகள், கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com