ஐ.ஏ.எஸ். பரீட்சையில் காப்பி அடிக்க உதவிய அதிகாரி மனைவி குழந்தையுடன் ஜெயிலில் அடைப்பு

ஐ.ஏ.எஸ். பரீட்சையில் காப்பி அடிக்க உதவிய அதிகாரி மனைவி குழந்தையுடன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ். அகாடமியில் பணிபுரியும் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐ.ஏ.எஸ். பரீட்சையில் காப்பி அடிக்க உதவிய அதிகாரி மனைவி குழந்தையுடன் ஜெயிலில் அடைப்பு
Published on

சென்னை:

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சபீர்கரீம். இவர் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று நெல்லை மாவட்டம் நாங்குனேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணி நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியில் சேராமல் விடுமுறையில் இருந்தார். அவரது மனைவி ஜாய்சி ஐதராபாத்தில் வசித்து வரும் இவர் திருவனந்தபுரத்தில் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்தி வருகிறார்.

சபீர்கரீம் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கலெக்டராக விண்ணப்பித்திருந்தார். அதற்காக கடந்த 24-ந்தேதி சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல் நிலைப் பள்ளியில் முதன்மை தேர்வு எழுதினார். அப்போது அவர் புளுடூத் மூலம் காப்பியடித்தது தெரிய வந்தது. தேர்வு மையத்தில் இருந்து கேள்விகளை புளூடூத் மூலம் அவரது மனைவியிடம் சொல்லி அதற்கான விடைகளை கேட்டு எழுதினார். இதை உளவுத் துறை அதிகாரிகள் கண்காணித்து கண்டு பிடித்தனர். அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த 2-ம் தாள் தேர்வையும் அதே பாணியில் எழுதிய போது அவரை பிடித்தனர். போலீசார் தேர்வு மையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் சபீர்கரீமை கைது செய்து மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சபீர் கரீமின் மனைவி ஜாய்சி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்தனர்.

வீட்டில் இருந்த அவரை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். எழும்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் உதவி கமி‌ஷனர் சுப்பிரமணி விசாரணை நடத்தினார். விசாரணையின் போது ஜாய்சி கூறுகையில், “எனது கணவர் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் ஆர்வக்கோளாறில் தவறு செய்துவிட்டேன்” என கூறினார்.

இதையடுத்து அவர் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாய்சிக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை இன்னும் தாய்ப்பால் குடிக்கும் பருவத்தை தாண்டவில்லை. எனவே அதை வெளியில் வைத்து பராமரிக்க முடியாது என்பதால் ஜாய்சியுடன் அவரது குழந்தையும் ஜெயிலில் அடைக்கப்பட்டது.

ஜாய்சி நடத்தும் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பணிபுரியும் ஊழியர் ராம்பாபு என்பவரும் சபீர்கரீம் காப்பியடிப்பதற்கு உடந்தையாக இருந்துள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com