விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கொலை செய்த கணவர் கைது

விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவியை தீ வைத்து எரித்த கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் கெப்பிலிங்கம் பட்டியைச் சேர்ந்தவர் அழகர். இவரது மகள் பானு ரேகா (வயது 20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அவரது தாய்மாமன் ராஜ்குமார் (23) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் பானுரேகா கல்லூரி சென்று வந்தார்.

வத்ராயிருப்பைச் சேர்ந்த ராஜ்குமார், தற்போது பல்லடத்தில் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

அதனால், பானுரேகா தற்போது விருதுநகர் காந்தி நகரில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டில் தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரி சென்ற அவர் மாயமாகி விட்டதாக பாண்டியன் நகர் போலீசில் அழகர் புகார் செய்தார். இது தொடர்பாக பானுரேகாவின் தோழியிடம் போலீசார் விசாரித்தனர்.

அவர், சம்பவத்தன்று கல்லூரிக்கு பானுரேகா வரவில்லை என்றும், மாமா (கணவர்)வுடன் கோவிலுக்குச் செல்வதாக கூறிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பற்றி விசாரித்த போது, அவர் வத்ராயிருப்பில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து விட்டதாக ராஜ்குமார் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், ராஜ்குமாரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

பானுரேகாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று கோவிலுக்கு செல்ல வேண்டும் என அழைத்தேன்.

பானுரேகா வந்ததும் சமயபுரம் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். பின்னர் ஊர் திரும்பும்போது விராலிமலை அருகே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நான், பானுரேகா கழுத்தை நெரித்தேன். அதில் அவர் இறந்து விட்டார். இதனால் பயந்து போன நான், அங்குள்ள தனியார் தோட்டத்தில், பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்து விட்டு வந்தேன்.

ஆனால் பானுரேகா மாயமானது தொடர்பாக போலீசார் விசாரித்ததால் கொலை செய்ததை ஒப்புக் கொண்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விராலிமலை போலீசாருக்கு, பாண்டியன் நகர் போலீசார் தகவல் கொடுத்தனர். அப்போது அவர்கள் காலில் மெட்டி அணிந்த பெண் உடல், பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறினர்.

அதன் அடிப்படையில் விராலிமலை போலீசார் விருதுநகர் வந்து ராஜ்குமாரை அழைத்துச் சென்றனர்.

தாய்மாமனான ராஜ்குமார், மனைவியை எரித்துக் கொன்ற சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com