நத்தம் அருகே தங்கத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி நகை மோசடி- போலி மந்திரவாதி கைது

தங்கத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, நகை மோசடி செய்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
குமரேசன்
குமரேசன்
Published on

நத்தம்:

தங்கத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, நகை மோசடி செய்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோசுகுறிச்சி கரையூரை சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 45). விவசாயி. இவரிடம், திருச்சி மாவட்டம் மலம்பட்டியை சேர்ந்த குமரேசன் (40) என்பவர் தன்னை ஒரு மந்திரவாதி என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் சொன்னபடி செய்தால், தங்க நகைகள் இரட்டிப்பு ஆகும் என்று ஆசைவார்த்தை கூறினார்.

அதன்படி மலைச்சாமியை அவரது தோட்டத்து வீட்டின் அருகே ஒரு இடத்தில் 10 பவுன் நகைகளை குமரேசன் புதைத்து வைக்க சொன்னார். அந்த இடத்தில் ஒரு மாதம் கழித்து தோண்டி பார்த்தால் நகைகள் இரட்டிப்பு ஆகி இருக்கும் என்றார். இதனை நம்பிய மலைச்சாமி, அவர் சொன்ன இடத்தில் தன்னிடம் இருந்த 10 பவுன் நகைகளை புதைத்து வைத்தார்.

பின்னர் ஒரு மாதம் கழித்து, அந்த இடத்தை மலைச்சாமி ஆவலுடன் தோண்டி பார்த்தார். 20 பவுன் நகை இருக்கும் என்ற ஆசையில் தோண்டிய அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதாவது குறிப்பிட்ட இடத்தில் தான், புதைத்து வைத்திருந்த நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குமரேசனிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் தோட்டத்து வீட்டு வளாகத்தில் தான் புதைத்து வைத்திருந்த இடத்தில், 10 பவுன் நகைகளை குமரேசன் எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் மலைச்சாமி புகார் செய்தார். அதன்பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குமரேசன் போலி மந்திரவாதி என்பது தெரியவந்தது. மலைச்சாமியை போல மேலும் சிலரிடம் அவர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குமரேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நத்தத்தில் போலி மந்திரவாதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com