

ஓசூர்:
ஓசூர் குற்றப்பிரிவு போலீசார் அந்திவாடி சோதனைச்சாவடி அருகில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள வித்யா அரன்யா, 5-வது குறுக்கு தெருவை சேர்ந்த ராஜா என்கிற ராஜப்பா (வயது 40), வேலூர் மாவட்டம் நாட்றாம்பாளையம் அடுத்த தெக்குபட்டு அருகே உள்ள புத்துகோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற குள்ளகிருஷ்ணன் (29) என தெரியவந்தது.
அதில் குள்ள கிருஷ்ணன் 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும், சமீபத்தில் கிருஷ்ணகிரி டவுன் பகுதியில், வண்டியில் இருந்த இரண்டரை பவுன் நகையை திருடியதும் தெரிந்தது.
இதேபோல ராஜா என்கிற ராஜப்பா, கடந்த சில மாதங்களுக்கு முன், மத்திகிரி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதும், ஓசூர் டவுன் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் வீடு புகுந்து, 5 பவுன் நகை, உத்தப்பள்ளி அருகே அகரம் முருகன் கோவில் பகுதியிலும், உப்பரதம்மண்டரப்பள்ளியிலும் கடந்த, 28-ந் தேதி வீடு புகுந்து, தலா 2 பவுன் நகை, ராயக்கோட்டை அருகே முத்தம்பட்டியில் வீடு புகுந்து, 3 பவுன் நகை, உள்ளுகுறுக்கையில், 4 பவுன் நகையை திருடி சென்றதும் தெரிந்தது.
இதைத் தொடர்ந்து ராஜா, குள்ளகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 22 பவுன் நகைகளை மீட்டனர். #tamilnews