நீர்மட்டம் உயர்வு - வீராணம் ஏரி தண்ணீரை சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு

வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாதோப்பு நீரேற்று நிலையத்திற்கு காவிரி தண்ணீர் வந்ததையடுத்து, சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. #VeeranamLake #Cauvery
நீர்மட்டம் உயர்வு - வீராணம் ஏரி தண்ணீரை சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு
Published on

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முதன்மையாக விளங்கும் இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும்.

நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. நேற்று 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. இன்றும் அதே அளவு கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 41.55 அடியாக இருந்தது. இன்று அது மேலும் ஒரு அடி உயர்ந்து 42.45 அடியாக அதிகரித்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாதோப்பில் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. சில நாட்களில் இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் என கூறப்படுகிறது. #VeeranamLake #Cauvery

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com