வடசேரி பஸ் நிலையத்தில் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை

அடையாள அட்டையை தவற விட்டதால் மனமுடைந்த ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வடசேரி பஸ் நிலையத்தில் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை
Published on

நாகர்கோவில்:

சிவகாசி முத்துராமலிங்க புரம் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30), ராணுவ வீரர். தற்போது இவரது குடும்பத்தினர் மதுரை அழகர்கோவில் ரோடு சமூகவேல் நகரில் வசித்து வருகிறார்கள்.

காஷ்மீரில் பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்திருந்தார். பின்னர் பணிக்கு திரும்ப முடிவு செய்து அவர் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு வைத்து தனது ராணுவ வீரருக்கான அடையாள அட்டையை பார்த்தார். ஆனால் அவர் வைத்திருந்த பைகளில் அடையாள அட்டை இல்லை.

இதனால் பதறிப்போன கிருஷ்ணமூர்த்தி, தனது மனைவியை தொடர்பு கொண்டு வீட்டில் அடையாள அட்டை இருக்கிறதா? என்பதை பார்க்குமாறு கூறினார். வீட்டில் அடையாள அட்டை இல்லை என்று அவரது மனைவி கூறியதாக தெரிகிறது.

அடையாள அட்டை இல்லாவிட்டால் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் கிருஷ்ணமூர்த்தி மனம் உடைந்தார். இதையடுத்து சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்சில்  ஏறினார். ஆனால்  மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லாமல் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அங்கு வந்த அவர், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். போலீசார்  கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலைபரிதாபமாக இறந்தார். இது குறித்து வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் மதுரையில் உள்ள அவரது மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட அவர், அதிர்ச்சி அடைந்தார். அவரது உறவினர்கள் நாகர்கோவிலுக்கு வந்தனர்.

கிருஷ்ணமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. கிருஷ்ண மூர்த்தியின் தற்கொலைக்கு  வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com