லடாக்கில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்த ராணுவ தளபதி

இந்தியா-சீன எல்லையான லடாக்கின் லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவானே.
படைவீரரிடம் நலம் விசாரித்த ராணுவ தளபதி
படைவீரரிடம் நலம் விசாரித்த ராணுவ தளபதி
Published on

புதுடெல்லி:

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன. அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கி இரவு 12 மணி அளவில் நிறைவடைந்தது. 

இந்த பேச்சுவார்த்தையில், பங்கோங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன படைகள் பின்வாங்க வேண்டும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்த தகவல்களும் தற்போதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் உள்ள லடாக்கின் லே பகுதியை பார்வையிட இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று சென்றார். லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

சீனாவுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே லடாக் எல்லையில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com