‘பத்மாவத்’ படத்துக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு: அர்ஜூன் சம்பத் பேட்டி

‘பத்மாவத்’ படத்தில் இந்திய பெண்களை வீரமங்கைகளை காட்டி உள்ளனர். எனவே இந்த படத்தை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
‘பத்மாவத்’ படத்துக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு: அர்ஜூன் சம்பத் பேட்டி
Published on

கோவை:

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

‘பத்மாவத்’ படத்தில் ராணி பத்மாவதியை அவமானப்படுத்தும் வகையிலும், அலாவுதீனை பெருமைப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இருப்பதாகவும், வரலாற்றை திரித்து படமெடுப்பதாகவும் தகவல் வெளியானது. எனவே படப்பிடிப்பின்போதே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. நாங்களும் போராட்டங்களை நடத்தினோம்.

இந்நிலையில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து படம் வெளியாகியது. நேற்று இந்த படத்தை தியேட்டரில் பார்த்தேன். படத்தில் ராணி பத்மாவதியை அவமதிக்கும் வகையில் எந்த காட்சியும் இல்லை. அவரை பெருமைப்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ராணி பத்மாவதி 1000 பெண்களுடன் உயிர் மாய்க்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

படத்தில் இந்திய பெண்களை வீரமங்கைகளை காட்டி உள்ளனர். ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்படும் வகையில் காட்சிகள் உள்ளன. எனவே இந்த படத்துக்கு எதிரான போராட்டங்களை வாபஸ் பெறுகிறோம். இந்த படத்தை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது.

படக்குழுவினருக்கு எங்கள் போராட்டத்தை தெரிவிக்கிறோம். படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் கர்னிசேனா உள்ளிட்ட அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளோம்.

படத்தை முன்னதாகவே திரையிட்டுக் காட்டியிருந்தால் இப்பிரச்சினை ஏற்பட்டிருக்காது. டைரக்டர் பன்சாலி அதை செய்ய தவறி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இளையராஜா பத்ம விபூ‌ஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அந்த விருதுக்கு பெருமை சேர்க்கிறது. கோவையை சேர்ந்த 90 வயது யோகா பாட்டி நானம்மாள், கிராமிய இசை கலைஞர் விஜயலட்சுமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறோம் என்றார்.

பேட்டியின் போது கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, மாணவரணி செந்தில் ஆகியோர் உடனிருந்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com