அரியாங்குப்பத்தில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல் - ஒருவர் பலி

அரியாங்குப்பத்தில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

பாகூர்:

புதுவை பூரணாங்குப்பத்தை அடுத்த புதுக்குப்பத்தில் உள்ள லே -பாண்டி ஓட்டலில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் மீன் (வயது 22), மிரத்தாபூ (23) ஆகிய 2 பேர் 3 வருடங்களாக வேலை செய்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் நேற்று புதுவையில் உள்ள ஓட்டலில் வேலை செய்யும் தனது நண்பர்களை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பி வரும்போது நேற்று நள்ளிரவு அரியாங்குப்பம் பாலம் அருகே வந்த போது அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பு கட்டையில் பயங்கரமாக மோதியது. மேலும் அருகில் இருந்த மின்கம்பத்திலும் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் மற்றும் போலீசார் விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரசாந்த் மீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மிரத்தாபூ என்பவர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com