அரியலூர் மாணவி அனிதா தற்கொலை: தலைவர்கள் இரங்கல்

நீட் தேர்வால் மருத்துவ படிப்பை இழந்த அரியலுர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு தலைவர்கள், பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாணவி அனிதா தற்கொலை: தலைவர்கள் இரங்கல்
Published on

சென்னை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக சிரமப்பட்டு படித்து பிளஸ் டூவிலும் அதிக மதிப்பெண் பெற்றார்.

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததால் அனிதாவும் நீட் தேர்வு எழுதினார். அதில், 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இதனால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த அனிதா, இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி அனிதாவின் மரணத்துக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவை பற்றிய விவரம் வருமாறு:

இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், நீட்தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள் போராட வேண்டும். நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் குழப்பங்களே மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கட்சி தலைவர் விஜயகாந்த் கூறுகையில், மாணவர்களைப் பற்றி கவலைப்படாமல், பதவியை தக்கவைப்பதில் ஆட்சியாளர்கள் செயல்பட்டதன் விளைவே அனிதாவின் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ கூறுகையில், அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசே காரணம். மாணவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய - மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், மாணவி அனிதாவின் மரணம் தற்கொலை அல்ல. நீட் விலக்குக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலை முடிவு தவறானது. அனிதாவின் தற்கொலைக்கு அனுதாபம் தெரிவிக்கலாம், ஆனால், இதை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலை, மத்திய அரசின் பிடிவாதத்தின் விளைவு என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில், அனிதாவுக்கு கண்ணீரை காணிக்கையாக்குகிறது தமிழக வாழ்வுரிமை கட்சி எனக் கூறியுள்ளார்.

இதேபோல், தமிழக அரசின் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலை மிகவும் வேதனை அளிக்கிறது. எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com