

திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஒட்டக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அறிவழகன் (வயது 14). இவர் சுண்டக்குடி அரசு மேல்நிலைபள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு விடுமுறையை அடுத்து நேற்று அவர் சக நண்பர்களுடன் சேர்ந்து தெருவில் விளையாடியுள்ளார். பின்னர் நண்பர்களிடம் ஆடு மேய்ப்பதற்காக செல்கிறேன் எனக்கூறி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் அறிவழகனின் தாய் பாப்பாத்தி விவசாய வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்ற போது, வீட்டிற்குள் அறிவழகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் தூத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அறிவழகனின் உடலை பார்வையிட்டனர். அப்போது அறிவழகன் உடலில் கீரல்களுடன், வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அறிவழகன் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. ஏதாவது பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது புளூவேல் விளை யாட்டில் சிக்கியதால் இறந் தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். பள்ளி மாணவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.