ஆரல்வாய்மொழி அருகே பெண் தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை

ஆரல்வாய்மொழி அருகே பெண் தொழிலாளி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
ஆரல்வாய்மொழி அருகே பெண் தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை
Published on

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி கனகமூலம் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் உவரியில் தங்கி அங்குள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். 

இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 49). இவர் செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு தங்க கிருஷ்ணன் (25) என்ற மகனும், லிங்கபூபதி என்ற மகளும் உள்ளனர். லிங்கபூபதியை சீதப்பாலில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். லிங்கபூபதி தனக்கு சொந்தமான 16 பவுன் தங்கநகையை பாதுகாப்பு கருதி தாயார் ராஜேஸ்வரி வீட்டில் வைத்து இருந்தார். 

நேற்று காலை வழக்கம் போல் ராஜேஸ்வரி செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார். அவரை தொடர்நது மகன் தங்க கிருஷ்ணன் வீட்டை பூட்டி சாவியை மின்சார மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு நாகர்கோவிலில் உள்ள பர்னீச்சர் கடைக்கு வேலைக்கு சென்றார். 

மாலை 6 மணிக்கு வேலை முடிந்து ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்தார். வீட்டு சாவி மின்சார மீட்டர் பெட்டியிலேயே இருந்தது. அந்த சாவியை எடுத்து அவர் வீட்டுக்குள் சென்றார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை திறந்து பார்த்தார். அங்கிருந்த தனது மகளின் நகையான 16  பவுன் நகையும், அத்துடன் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணமும் திருடுபோய் இருந்தது. 

மின்சார மீட்டர் பெட்டியில் வீட்டுச் சாவியை வைப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று ராஜேஸ்வரியும், தங்க கிருஷ்ணனும் வேலைக்கு சென்ற பின்னர் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதுபற்றி ராஜேஸ்வரி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். ராஜேஸ்வரி வீட்டில் கைவரிசை காட்டியது அந்த பகுதியைச் சேர்ந்த கொள்ளையராக இருக்கலாம் என்று கருதி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com