

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் 2 வார கால அவகாசம் கோரியுள்ளது.
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி விசாரணையை தொடங்கிய நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதாவின் உறவினர்கள், உடன் வசித்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
தி.மு.க. மருத்துவ அணியைச் சேர்ந்த டாக்டர் சரவணன், ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கிய அரசு டாக்டர் பாலாஜி, அரசு ஆஸ்பத்திரி டீன், மருத்துவத் துறை அதிகாரிகள், அரசு டாக்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் மற்றும் தீபாவின் கணவர் மாதவன் ஆகியோருக்கு நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தினார்.
அடுத்தகட்டமாக பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் பிரதாப் சி.ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு அப்பலோ நிர்வாகம் 2 வார கால அவகாசம கோரியுள்ளது.
இதுதொடர்பாக, அப்பலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஜனவரி 2-ம் தேதி ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், விசாரணை ஆணையத்திடம் நேரில் ஆஜராக மேலும் 2 வார காலம் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.