

புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களின் தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்யதிருப்பதாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய தயாரிப்பு ஆலைகளை கட்டமைப்பது குறித்து ஆப்பிள் மற்றும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக கலிபோர்னியாவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் SE மாடல்களின் தயாரிப்பு பணிகளை துவங்கிது.
இத்துடன் பின்லாந்தின் நோக்கியா மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்ட காப்புரிமை சார்ந்த பிரச்சனைகள் நிறைவுற்றதாகவும், இரு நிறுவனங்களிடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வருவாய் பெற இருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் காப்புரிமைகள் சார்ந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வரயிருக்கும் வருவாய் இந்த காலாண்டு முதல் துவங்கும் என நோக்கியா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி நோக்கியா நிறுவனம் சார்பில் ஆப்பிள் நிறுவனத்திற்கு நெட்வொர்க் சார்ந்த உள்கட்டமைப்புகளை வழங்க இருக்கிறது.
இதனிடையே நோக்கியாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3310 மாடலின் விற்பனை கடந்த வாரம் துவங்கியுள்ளது. மேலும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விற்பனை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.