மாநிலம் முழுவதும் கழிப்பறைகளை கட்டாவிட்டால் உண்ணாவிரதம் - சந்திரபாபு நாயுடு மிரட்டல்

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நான் வருவேன். மார்ச் 31-ம் தேதிக்குள் நீங்கள் கழிப்பறைகளை கட்டாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் கழிப்பறைகளை கட்டாவிட்டால் உண்ணாவிரதம் - சந்திரபாபு நாயுடு மிரட்டல்
Published on

ஐதராபாத்:

தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையிலான ஆந்திர மாநில அரசின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ‘ஜென்ம பூமி’ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்று மக்களிடையே பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் 100 சதவீதம் கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 7 மாவட்டங்களிலும் இதேபோல் நிறைவேற்றப்பட வேண்டும். முழுவதும் தூய்மையான மாநிலமாகவும், சுகாதாரம் மிக்க மாநிலமாகவும் ஆந்திரா மாற வேண்டும் என்ற இயக்கத்தை நான் குறிக்கோளாக கொண்டுள்ளேன்.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 204 வீடுகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 624 வீடுகளில் மட்டுமே கழிப்பறைகள் உள்ளன. உங்கள் வீடுகளில் கழிப்பறைகளை கட்டாவிட்டால் நீங்கள் சுயமரியாதையை இழந்தவர்களாகி விடுவீர்கள். கழிப்பறை வசதிகள் இல்லாததால் ஆந்திர மாநிலத்தின் கவுரவம் குலைவதுடன் உங்களது ஆரோக்கியமும் சீர்கேட்டுக்குள்ளாகிறது.

வேறு சில மாவட்டங்களிலும் இதேநிலை நீடிப்பதாக தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் வரும் மார்ச் 31-ம் தேதிவரை அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் கழிப்பறை வசதி இல்லாத எந்த வீடும் இம்மாநிலத்தில் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.

அப்படி இல்லையென்றால், உங்கள் கிராமத்துக்கு நான் வருவேன். இரவும் பகலும் உங்களுடன் இருந்து கழிப்பறையை கட்டிய பிறகுதான் அமராவதி நகருக்கு திரும்பி செல்வேன்.

இல்லையென்றால், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்கு பிறகு அமைதியான வழியில் தர்ணா போராட்டத்தில் குதிப்பேன். ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதமும் இருப்பேன். அதன்பிறகாவது என் மீது பரிதாபப்பட்டு நீங்கள் கழிப்பறைகளை கட்டுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com