எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்: சசிகலாவின் சகோதரர் திவாகரன் எச்சரிக்கை

அணிகள் இணைந்து செயல்படுவதன் மூலம் ஆட்சி,கட்சி இரண்டையும் காப்பாற்ற முடியாது, எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்: சசிகலாவின் சகோதரர் திவாகரன் எச்சரிக்கை
Published on

சென்னை:

நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணிகள் இன்று இணைந்தன.

பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டன. அதேபோல், பாண்டியராஜனுக்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணிகள் இணைப்பு குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருவரும் இணைந்துள்ளனர். இரு அணிகளும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

என்னுடன் தொடர்பில் உள்ள எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டு வருகின்றனர். பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் சசிகலாவை ஒதுக்கச் சொல்லாது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 122 எம்.எல்.ஏக்கள் இல்லை. அணிகள் இணைந்து செயல்படுவதன் மூலம் ஆட்சி,கட்சி இரண்டையும் காப்பாற்ற முடியாது. ஆட்சி நீடிக்கும் என்று உத்தரவாதம் தரமுடியாது. எந்த நேரமும், எதுவும் நடக்கலாம்.

இவ்வாறு தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com