இந்தியர்கள் யாராவது மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெறுகிறார்களா? -உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

இந்தியாவில் மருத்துவத் துறையில் ஆராய்ச்சியாளர்களை முறையாக ஊக்கப்படுத்தவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை
Published on

மதுரை:

கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்காக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக தமிழக அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் மருத்துவத்துறையில் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்தவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்தியர்கள் யாராவது மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெறுகிறார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் முறையாக ஊக்குவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்றும், ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவிக்கப்படாததில் பல்வேறு அரசியல் நகர்வுகள் உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இம்ப்ரோ மருந்து தொடர்பான ஆய்வறிக்கையை அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை நாளைக்கு (அக்.15) ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com