பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து மாகாணத்தில் போராட்டம்: போலீஸ் தடியடி
கராச்சி:
பாகிஸ்தானில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் சிந்து மாகாணத்தில் சுதந்திர நாடு கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர். பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோர், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வளங்களை திருடுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இன்று சிந்து பல்கலைக்கழகத்தில் இருந்து ஹைதராபாத் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் வரை நடைபெற்ற ஊர்வலத்தில் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட ஜேஎஸ்எம்எம் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்காணோர் பங்குபெற்றனர். இந்த ஊர்வலத்தில் சுதந்திர சிந்து வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான பதாகைகளுடன் அவர்கள் சென்றனர். ஊர்வலத்தின் போது பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் சென்றனர்.
பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள சிந்து மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் ஐ.நா. சபை, மற்றும் மனித உரிமை ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகளையும் வீசினர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு சிந்து பகுதியை சேர்ந்த அரசியல் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

