

பீஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர்களின் பரிசோதனை மாதிரிகளை எடுத்து மீண்டும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் சார்பில் ரிச்சார்ட் மெக்லாரன் விசாரணை நடத்தினார்.
அப்போது பீஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பெரும்பாலான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் ரஷிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் எனத் தெரியவந்தது. இதனால் 2016-ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரிலும், தற்போது முடிவடைந்த தென்கொரியா குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ரஷியா பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு ரிச்சார்ட் மெக்லாரன் தனது அறிக்கையில் ஊக்கமருந்து தொடர்பான விசாரணையில் கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது என்பது போல் நீண்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்ட ரஷிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்திருக்கலாம் என சந்தேகப்படப்படுகிறது.
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தொடரில் பெண்களுக்கான நீண்ம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் கலந்து கொண்டார். இவர் 6-வது இடத்தை பிடித்தார். ரஷிய வீராங்கனைகள் தத்யானா லெபெதேவா, இரினா சிமாகினா, தத்யானா கோடாவா ஆகியோர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றனர். மரியோன் ஜோன்ஸ் 4-வது இடம் பிடித்தார். இவர் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியதால் 4-வது இடத்தை இழந்தார். இதனால் அஞ்சு ஜார்ஜ் 5-வது இடத்தில் உள்ளார்.
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற லெபெதேவா, 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் நீளம் தாண்டுதல் மற்றும் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால், ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் பதக்கத்தை இழந்தார். சிமாகினா 2012-ம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 2012 ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டது. தத்யானா கோடாவாவின் 2005 உலக சாம்பியன்ஷிப் மாதரி மறுசோதனை செய்யப்பட்டபோது ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது ரிச்சார்ட் மெக்லாரன் அறிக்கையை மேற்கொள் காட்டி இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் தடகள பெடரேசன் அமைப்புகள் சர்வதேச தடகள பெடரேசனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதில் ஏதென்ஸ் ஒலிம்பிக் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச தடகள பெடரேசன் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு புகார் அளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது. அப்படி நடந்து ரஷிய வீராங்கனைகள் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், அஞ்சு ஜார்ஜ்-க்கு வெள்ளி பதக்கம் கிடைக்க வாய்க்கு கிடைக்கும்.