காயல்பட்டிணம் நகராட்சி அலுவலகம் முன்பு நாளை திமுக ஆர்ப்பாட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை

சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, நாளை காயல்பட்டிணம் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
காயல்பட்டிணம் நகராட்சி அலுவலகம் முன்பு நாளை திமுக ஆர்ப்பாட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை
Published on

முள்ளக்காடு:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை திடீரென உயர்த்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது அ.தி.மு.க. அரசு. தமிழகத்தில் 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தாமல் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3500 கோடி பெற முடியாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சிகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது.

மக்கள் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் கூறினால் தீர்வு கிடைப்பதில்லை. இந்த நிலையில் 100 சதவீதம் சொத்து வரியை திடீரென உயர்த்தி ஏழை- எளிய நடுத்தர மக்கள் வணிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தமிழக அரசு.

இதை கண்டித்தும், உடனடியாக உயர்த் தப்பட்ட சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை )காலை 10 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளராகிய எனது தலைமையில் காயல்பட்டணம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஊராட்சி வட்ட செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள், வணிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com