

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் பாலக்கரை ஆர்ச் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பானுமதி தலைமை தாங்கினார். சக்தி, தமிழரசி, தையல்நாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ரத்தினமாலா, மாவட்ட செயலாளர் மணிமேகலை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அழகர்சாமி, மாவட்ட துணை தலைவர் கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முறையான பென்சன் வழங்க வேண்டும். 1-1-2016 முதல் ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்கிட வேண்டும்.
மே மாதம் கோடைவிடுமுறை-பறிக்கப்பட்ட சனிக்கிழமை விடுமுறையையும் வழங்க வேண்டும். அறிக்கைகளை கணினிமயமாக்குவதற்கு பணியாளர்களிடம் செலவுத்தொகை கேட்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கொளஞ்சி நன்றி கூறினார்.