

தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 55). இவர் ஆண்டிப்பட்டியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு வசந்த் (25), சசிக்குமார் (19), குருதாஸ் (13) ஆகிய 3 மகன்கள் இருந்தனர். இதில், வசந்த் தனது தந்தையுடன் ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். சசிக்குமார், ராஜஸ்தானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குருதாஸ், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இதற்கிடையே ராஜஸ்தானில் இருந்து வந்த சசிக்குமார், போடியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
அவருக்கு தொற்று இல்லாவிட்டாலும் தொடர்ந்து தனிமைப்படுத்தும் முகாமிலேயே தங்க வைக்கப்பட்டதால் மனமுடைந்த சசிக்குமார், கடந்த மே மாதம் 17-ந்தேதி முகாமில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் வேதனை அடைந்த அவரது தாய் ராமலட்சுமி உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இதையடுத்து மணிகண்டன், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து விவரத்தை கூறினார். அதன்படி உறவினர்கள், ராமலட்சுமியின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் மனைவியும், 2-வது மகனும் அடுத்தடுத்து இறந்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மணிகண்டன், நேற்று காலை 6 மணி அளவில் தனது வீட்டில் இருந்து கடைக்கு மூத்த மகன் வசந்த்துடன் சென்றார். பின்னர் அங்கு இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சந்தேகம் அடைந்த உறவினர்கள், கடைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜவுளிக்கடையின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கடையின் பூட்டை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டனும், வசந்தும் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து உடனடியாக ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணிகண்டன், வசந்த் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது ஆண்டிப்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்துபோன மணிகண்டனின் 3-வது மகன் குருதாஸ் தனிமையில் வாடுகிறான். தாய்-தந்தை, 2 அண்ணன்களை இழந்து வாடும் அவன், யார் அரவணைப்பும் இன்றி நிர்க்கதியாகி உள்ளான்.
குருதாசின் பரிதாப நிலை, அவரது உறவினர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.