

போபால்:
குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றதும் அவரது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த ஆனந்திபென் படேல் அம்மாநில முதல்வராக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆனந்திபென், அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவர் தமிழக கவர்னராக நியமிக்கப்படலாம் என்று முன்னர் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அவரை மத்தியப்பிரதேச மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 19-ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, போபால் நகரில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஆனந்திபென் பட்டேல் கவர்னராக பதவியேற்றார். அவருக்கு மத்தியப்பிரதேச மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கவர்னராக பதவியேற்ற ஆனந்திபென் படேலுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கிடையில், குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து தனியார் பஸ் மூலம் மத்தியப்பிரதேசம் மாநில தலைநகரான போபால் நகருக்கு வந்த ஆனந்திபென் பட்டேல், வரும் வழியில் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாலீஸ்வரர் ஆலயத்தில் இன்று வழிபாடு செய்தார். #AnandibenPatel #MadhyaPradesh #tamilnews