

வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும், அதேபகுதி மலைகிராமத்தை சேர்ந்த அவரின் உறவினர் 8-ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இன்று அதிகாலை திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிலையில் மணப்பெண் சிறுமி என கலெக்டர் ராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அணைக்கட்டு தாசில்தார் குமாருக்கு இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீராஜ் மற்றும் அதிகாரிகள் மணமகன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அப்பெண்ணிற்கு 13 வயது என்பதும் 8-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் 18 வயது நிரம்பாத பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் இதுதொடர்பாக பெற்றோரிடம் எழுத்துப்பூர்வமாக கையெழுத்து வாங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த அவரின் உறவினர் பெண்ணுடன் இன்று திருமணம் நடக்க இருந்தது.
அந்த மணப்பெண் 18 வயது நிரம்பவில்லை என்று சமூக ஆர்வலர் ஒருவர் வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இது சம்பந்தமாக வேலூர் மகளிர் இன்ஸ்பெக்டர் அலமேலுமங்கை மற்றும் போலீசார், சலவன்பேட்டை சென்று சம்பந்தப்பட்ட பெற்றோர் மற்றும் மணப்பெண்ணிடம் விசாரணை நடத்தி அவர்கள் 3 பேரையும் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அப்பெண் 18 வயதை எட்டாத சிறுமி என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். மேலும் அப்பெண்ணை வேலூர் பிற்காப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.