

திருவொற்றியூர்:
வங்க கடலில் நிலை கொண்டுள்ள அம்பன் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் கடல்அலை பல அடி உயரத்துக்கு சீறி எழுகின்றன. எண்ணூர் கடற்கரை சாலையில் தடுப்பு கற்களை தாண்டி கடல் நீர் சாலையில் வந்து விழுகிறது.
கடல் சீற்றம் காரணமாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதியில் மீனவர்களை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பைபர் படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரங்களில் பாதுகாப்பான இடங்களில் படகுகளையும் வலைகளையும் ஏற்றி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.