

பல்லடம்:
திருப்பூர் காங்கயம் ரோடு வி.எஸ்.ஏ. நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்கள் கார்த்தி (27). மாணிக்கராஜ் (23). அண்ணன்-தம்பி இருவரும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
கார்த்தி புதிதாக ஆம்னி வேன் வாங்கி இருந்தார். இதற்கு உதிரி பாகங்கள் வாங்க ஆம்னி வேனில் கோவை வந்தார்.
அவருடன் அவரது தம்பி மாணிக்கராஜ், நண்பர்கள் சரவணன் (31), அஜ்மீர் (21), முகமது உசேன் (20),முகம்மது மைதீன் (20) ஆகியோரும் வந்தனர்.
அவர்கள் கோவையில் உதிரி பாகங்கள் வாங்கி விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். வேனை முகம்மது மைதீன் ஓட்டி சென்றார். நள்ளிரவு 11.30 மணியளவில் அவர்களது ஆம்னி வேன் கோவை - திருப்பூர் சாலையில் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் வளைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே கண்டெய்னர் லாரி வந்தது. வேன் வேகமாக வருவதை அறிந்த லாரி டிரைவர் பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார். ஆனாலும் ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கார்த்தி, அவரது தம்பி மாணிக்கராஜ், நண்பர்கள் சரவணன்,அஜ்மீர் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள்.
முகம்மது உசேன், முகம்மது மைதீன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்து குறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிர் இழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பனியன் தொழிலாளர்கள் 4 பேர் பலியான சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.