பெரம்பலூரில் அடுத்தடுத்த சம்பவம்- அ.ம.மு.க. நிர்வாகி கொலை

பெரம்பலூரில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களால் அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொலை
கொலை
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் சங்கு பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வல்லத்தரசு (வயது 22). இவர் அ.ம.மு.க. நகர மாணவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது நண்பர் சூர்யா (20).

நேற்றிரவு 2 பேரும் பெரம்பலூர்-விளாமுத்தூர் சாலை பகுதியில் உள்ள வாட்டர் சர்வீஸ் நிலையம் அருகில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென 2 பேரையும் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. இதில் வல்லத்தரசு இறந்தார்.

படுகாயமடைந்த சூர்யா பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி. நிஷா பார்த்திபன், டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வல்லத்தரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வல்லத்தரசுவின் அண்ணன் மணிகண்டனுக்கும், சங்குபேட்டையை சேர்ந்த விஜயராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தனது அண்ணனுக்கு ஆதரவாக வல்லத்தரசு பேசியுள்ளார்.

அதன்பிறகு இரு தரப்பினரும் சமாதானமாகி சென்றனர். இந்தநிலையில் நேற்று வல்லத்தரசுவை விஜயராஜ், பிரகாஷ், கார்த்தி, ராஜா ஆகிய 4 பேரும் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளனர். தலைமறைவான 4 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூரில் நேற்று முன்தினம் இரவு பிரபல ரவுடி கபிலன் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு வல்லத்தரசு கொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களால் பெரம்பலூர் பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com