

புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
காஷ்மீர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே. காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட காங்கிரஸ் விரும்புகிறதா? ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மாற்ற முடியாது; இது அரசியல் ரீதியான நகர்வு அல்ல. சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் முடிவெடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என தெரிவித்தார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அனைத்து விதிகளையும் மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார். மக்களவையில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது எனவும் ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரம் நிலுவையில் உள்ளபோது மசோதாவை கொண்டு வந்தது ஏன். காஷ்மீர் உள்நாட்டு விவகாரமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, பிரிந்துள்ள காஷ்மீரை ஒன்றிணைக்கும் முயற்சி இது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அக்சை சின், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவையே. உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என ஆவேசமாக தெரிவித்தார்.