அமைந்தகரையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி வீடு இடிந்தது

அமைந்தகரையில் இன்று அதிகாலை அடுக்குமாடி வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு இடிந்தது. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அமைந்தகரையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி வீடு இடிந்தது
Published on

சென்னை:

அமைந்தகரை போலீஸ் நிலையம் அருகே எம்.எம்.காலனி உள்ளது. இங்குள்ள அடுக்குமாடி வீட்டில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் வாசு (வயது 45), பூ வியாபாரி. மனைவி ரேவதி. மகன் அய்யனார், மருமகள் லலிதா, தங்கை கஸ்தூரி ஆகியோர் நேற்று இரவு வீட்டின் திறந்த வெளிப்பகுதியில் உள்ள காலி இடத்தில் காற்றுக்காக படுத்து இருந்தனர்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டின் பெட்ரூம் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. அங்குள்ள கட்டில், படுக்கை, மெத்தை திடீரென எரிந்து கொண்டிருந்தது.

உடனே அனைவரும் எழுந்து தண்ணீரை ஊற்றி தீயைஅணைக்க முயன்றனர். அதற்குள் தீ வேகமாக பரவியது. அங்கு இருந்த பீரோ, கட்டில், துணிமணிகள் எரிந்து நாசமானது.

தீயின் வேகம் அதிகரித்ததால் அங்கிருந்த கியாஸ் சிலிண்டருக்கு பரவியது. உடனே கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

இதில் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த பட்டுசேலை, துணிகள், 20 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்க பணம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரிகள் 2 வண்டிகளில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

காற்றுக்காக வாசு, ரேவதி, உள்பட 5 பேர் திறந்த வெளிப்பகுதியில் படுத்து தூங்கியதால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த தீவிபத்து சம்பவம் அமைந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com