அமைந்தகரையில் போலீஸ் என்று கூறி பணம் கேட்டு மிரட்டல் - 2 ரவுடிகள் கைது

அமைந்தகரையில் போலீஸ் என்று கூறி பணம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைந்தகரையில் போலீஸ் என்று கூறி பணம் கேட்டு மிரட்டல் - 2 ரவுடிகள் கைது
Published on

போரூர்:

அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலை ரெயில்வே காலனி 1-வது தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் ஞானவேல்.

இவரது டீக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை வந்த 2 பேர் நாங்கள் போலீஸ் என்று கூறினர். இங்கு கடை நடத்த வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.40ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று ஞானவேலை மிரட்டினர்.

சந்தேகமடைந்த கடை ஊழியர் பாண்டியன் உடனடியாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் மற்றும் போலீசார் பணம் கேட்டு மிரட்டிய இருவரையும் பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ் என்கிற கல்லறை சதீஷ் (29) சூளைமேட்டைச் சேர்ந்த மதிவாணன் (33) என்பது தெரியவந்தது. அமைந்தகரை பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் மிரட்டி பணம் வசூல் செய்து சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கல்லறை சதீஷ் மீது திருவேற்காடு, பூந்தமல்லி, கே.கே.நகர், அமைந்தகரை, குன்றத்தூர் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com